பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்


பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்
x

குடியாத்தத்தை அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

பைகளை தூக்கி வீசினார்

வேலூரில் இருந்து இரண்டு டவுன் பஸ்கள் லத்தேரி, பனமடங்கி, பள்ளத்தூர், பூசாரி வலசை வழியாக பரதராமிக்கு காலையிலும், மாலையிலும் வந்து செல்கிறது.

இந்த டவுன்பஸ் மூலமாக மாணவர்கள், பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரதராமிக்கு டவுன் பஸ் மூலம் தினமும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக டவுன் பஸ்கள் வனகாளியம்மன் கோவில் அருகே நின்று செல்வது இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டவுன் பஸ்சில் செல்லும் மாணவர்கள் வன காளியம்மன் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை நிறுத்த கூறியபோது நிறுத்தாமல் பைகளை பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள், மாணவர்கள் வனக்காளியம்மன் கோவில் அருகே நேற்று திடீரென சாலையில் முள் செடிகளை வெட்டிப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிறுத்தி செல்ல வேண்டும்

அப்போது டவுன் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். வனக்காளியம்மன் கோவில் அருகில் பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றி மற்றும் இறக்கிச் செல்ல வேண்டும். அவர்களுடைய புத்தகப் பைகளை தூக்கி எறிவது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. அப்போது வனக்காளியம்மன் கோவில் அருகே பயணிகள் நிழற்கூடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். விரைவில் கட்டி தரப்படும் என ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.


Next Story