வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு பாதிப்பு


வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளலூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்புற பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

கோயம்புத்தூர்

வெள்ளலூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்புற பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கோவை மாநக ராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு பகுதியில் மதில் சுவர் கட்ட ரூ.36 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி அளிப்பது உள்பட 24 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

269 சதுர அடி பரப்பளவுக்குள் உள்ள வீடுகளுக்கு ரூ.250 சேவை கட்டணம் வசூலித்து 59,166 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதில் பல்வேறு முரண்பாடு இருந்ததால் அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

கூட்டத்தில் மேயர் கல்பனா பேசும்போது, மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். வளர்ச்சி பணிகள் தரமானதாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படும்.

மாமன்ற உறுப்பினர்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தரப்படும் என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசும் போது, கோவை மாநகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் ரூ.250 கோடி வரி வசூல் இலக்கை எட்டிவிடுவோம்.

குறிப்பாக கடந்த 2 நாட்களில் ரூ.4½ கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சொத்துவரி செலுத்தாமல் கோர்ட்டில் மனுதாக்கல் மட்டும் செய்தவர்களிடம் இருந்தும் சொத்துவரி வசூலிக்கப்படும். தடையாணை கொடுத்து இருந்தால் மட்டும் தற்காலிகமாக வரி வசூலிக்கப்படாது.

தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் ரூ.50 கோடி நிதி விரைவில் மாநகராட்சிக்கு வர உள்ளது. அதில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

குப்பை கிடங்கில் துர்நாற்றம்

தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி பேசும்போது, வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுண்டக்காமுத்தூர் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வெள்ளலூர் குப்பை கிடங்கு துர்நாற்றம் குறித்து கைகளில் பதாகைகளை பிடித்தபடி போராட் டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குனியமுத்தூர், மைல்கல், பி.கே.புதூர், சுண்டக்காமுத்தூர்வரை மக்கள் பாதிக்கப்படுகின்ற னர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் மருந்து தெளித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.

சாலை சீரமைப்பு

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசும்போது, பனிக்காலம் என்பதால் துர்நாற்றம் வீசுகிறது. உரியமுறையில் மருந்து தெளிக்கப்படுகிறது. குப்பைகளை இரவு நேரத்தில் ஊழி யர்கள் புரட்டுவதால் இது ஏற்படுகிறது.

பகல்நேரத்தில் குப்பைக ளை புரட்டி துர்நாற்றம் வீசாமல் தடுப்பதற்கு ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி பேசும்போது, கணபதி பகுதியில் உணவு கிட்டங்கி சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் புதர்மண்டி கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சாலைக்கு ஜி.டி.நாயுடு பெயர்

கார்த்திக் செல்வராஜ் (தி.மு.க) :- என்னை சிறந்த கவுன்சிலராக தேர்வு செய்த 72 -வது வார்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கவுன்சிலர்களை வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று சுகாதார பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

விஞ்ஞானி ஜி.டி.நாயுடுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தண்டு மாரியம்மன் கோவில் முதல் கோவை விமான நிலையம் வரை உள்ள சாலைக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க வேண்டும்.

மாடுகளை ஏலத்தில் விடவேண்டும்

சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் :- 80-வது வார்டு பகுதிகளில் சூயஸ் குடிநீர் திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகளை கான்கிரீட் கலவை வைத்து சரி செய்ய வேண்டும். மாநகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து வ.உ.சி பூங்காவில் அடைக்கும் நிலை உள்ளது. உரிமையாளர்கள் வராத நிலையில் மாடுகளை ஏலத்தில் விட வேண்டும்.

வரி விதிப்பில் முரண்பாடு

மத்திய மண்டல தலைவர் மீனா லோகு:-

எனது வீட்டிற்கு ஆண்டிற்கு ரூ.30 ஆயிரம் வரி செலுத்துகிறேன். ஆனால் எனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சில வீடுகளுக்கு ரூ.500 மட்டுமே வரி வருகிறது.

இது போன்று வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகள் சரி செய்ய வேண்டும். மேலும் மறு ஆய்வு செய்து வீடுகள், கட்டிடங்களை அளவீடு செய்து வரி விதிக்க வேண்டும் என்றார்.

வரி நிர்ணயத்தில் ஏற்றத்தாழ்வு

கவுன்சிலர் அழகுஜெயபால் (காங்கிரஸ்) :- மாநகராட்சி சாலை பணிகளில் தரத்தை கடைபிடிக்க வேண்டும். தார்சாலை உள்ளிட்ட பணிகள் நடைபெறும் போது கவுன்சிலர்களையும் அழைக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையாளர், மேயர் தனியாக கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கும்போது மாநகராட்சி கட்சி தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்றார்.

ஆசிரியர் இல்லை

26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசும்போது மாநகராட்சி மேல்நிலைப்பளிகளில் பொருளாதார பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை.

இதனால் மாணவர்களின் கல்வித்தரம், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கட்டிட வரைபட அனுமதியில் மென்பொருள் பிரச்சினையை காரணம் காண்பித்து பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இதே போல் பல்வேறு கவுன்சிலர்களும் அடிப்படை வசதி கேட்டு பேசினார்கள்.


Next Story