சுரங்க நீரை வெளியேற்றும் குழாய்களை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


சுரங்க நீரை வெளியேற்றும் குழாய்களை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x

என்.எல்.சி. சுரங்கம் 1 ஏ பகுதியில் சுரங்க நீரை வௌியேற்றும் குழாய்களை மாற்ற அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கம் 1 ஏ பகுதியில் இருந்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் சுரங்க தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்திற்காக சுரங்க தண்ணீர் வெளியேற்றும் குழாயை என்.எல்.சி. நிறுவனம் ஏற்கனவே கையகப்படுத்திய இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.

இதுபற்றி அறிந்த வானதிராயபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஏற்கனவே கையகப்படுத்திய இடத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை, வேலைவாய்ப்பு வழங்கவில்லை உடனடியாக அவைகளை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவல் அறிந்ததும் டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் தொழிலக பாதுகாப்பு படையினர் அங்கு குவிந்தனர். பின்னர் என்.எல்.சி. அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வானதிராயபுரம் ஊராட்சி முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தற்போது குழாய் அமைக்கும் பணி நடைபெறவில்லை. முக்கிய பிரமுகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்ட பின்பு தான் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் குழாய் அமைக்கும் பணியையும் என்.எல்.சி. ஊழியர்கள் தற்காலிகமாக கைவிட்டு பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை திருப்பி எடுத்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story