குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
மணப்பாறை:
வாக்குவாதம்
மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் சுமார் 70 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்த நிலையில் இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டம்
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.