அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

சீர்காழி தென்பாதியில் தெரு பெயர் பலகையை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி தென்பாதியில் தெரு பெயர் பலகையை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆணையரிடம் மனு அளித்தனர்.

தெரு பெயர் பலகை அகற்றம்

சீர்காழி தென்பாதியில் காட்டுநாயக்கன் தெரு உள்ளது. இந்த தெருவில் வசிக்கும் மக்கள் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த தெருவிற்கு செல்லும் மெயின் ரோட்டில் நகராட்சி சார்பில் காட்டுநாயக்கன் தெரு என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக நகராட்சி பணியாளர்கள் காட்டுநாயக்கன் தெரு பெயர் பலகையை அகற்றிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

இதனை தொடர்ந்து மீண்டும் காட்டுநாயக்கன் தெரு பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் பெயர் பலகையை அகற்றிய நகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர்.

காட்டுநாயக்கன் தெரு பெயர் பலகை அகற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதற்காக அந்த பெயர் பலகை அகற்றப்பட்டது என்ற விவரங்களை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற 8-ந்தேதி(திங்கட்கிழை) சாலை மறியல் போராட்டம் செய்யப்படும் என்று கோஷங்கள் எழுப்பினர்..

ஆணையரிடம் மனு

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனால் போராட்டத்தை கைவிட்டு ஆணையரிடம் மனுக்களை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story