தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ராதாபுரம் அருகே, குடியிருக்கும் இடம், விவசாய நிலத்தை காலி செய்ய வலியுறுத்துவதாக கூறி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே, குடியிருக்கும் இடம், விவசாய நிலத்தை காலி செய்ய வலியுறுத்துவதாக கூறி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
10 ஆயிரம் குடும்பங்கள்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதியான ஆவரைக்குளம், மதகனேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000 குடும்பங்கள் திருவாவடுதுறை மற்றும் தருமபுர ஆதீன நிலத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை செலுத்தி வசித்து, விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் துணையோடு, ஆதீனத்தை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு குடியிருப்போரிடம் குத்தகை பணம் அதிகளவில் கேட்பதாகவும், அப்படியே கொடுத்தாலும் அடவோலை குத்தகை பணத்திற்கு முறையாக ரசீது வழங்காமல், அவர்களின் இடத்தினை வேறு நபர்களுக்கு அடவோலை போட்டு குடியிருப்பு இடம் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து காலி செய்ய வலியுறுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
சமாதான கூட்டம்
இதனை கண்டித்து திருவாவடுதுறை மற்றும் தர்மபுர ஆதீனங்களுக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதகனேரி முத்தாரம்மன் கோவிலில் வைத்து சமாதான கூட்டம் நடந்தது.
ராதாபுரம் தாசில்தார் மற்றும் திருவாடுதுறை தருமபுர ஆதீனங்களின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சமாதான கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
அதன்பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை முன்பாக திருவாவடுதுறை மற்றும் தருமபுர ஆதீனங்கள் மற்றும் பொதுமக்கள் கூடி மீண்டும் சமாதான கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று ராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சபாநாயகர் அப்பாவு, நெல்லை எம்.பி. ஞானதிரவியம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஸ்குமார், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.