18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்-கலெக்டர் பழனி அறிவுரை


18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்-கலெக்டர் பழனி அறிவுரை
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

ரத்ததான தினம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தினம் மற்றும் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு குருதி கொடை அமைப்பாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு 136 நிறுவனங்கள் மற்றும் அமைப்பாளர்கள், 65 தனிநபர் ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அறிவுரை

ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய திரவமாகும். நாம் அறிவியலில் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், ரத்தம் என்ற அதிசய திரவத்தை நாம் இன்றும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. நம் உடலில் உள்ள ரத்தம், காயம்பட்டவர்களுக்கும், ரத்தம் தேவைப்படுவோருக்கும் வழங்கக்கூடிய ஒரு பரிசுப்பொருளை போன்றதாகும். நாம் ஒவ்வொரு முறை தானமாக கொடுக்கும் ஒரு யூனிட் ரத்தம் 4 உயிர்களை காக்கும்.

ரத்ததானத்தின் மூலம் மாரடைப்பை குறைக்கலாம், புதிய ரத்த அணுக்கள் உருவாக ஊக்கப்படுத்துகிறது. ரத்ததானம் செய்வோர் கடைபிடிக்க வேண்டியவை, கருவுற்றிருக்கும்போதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது, மலேரியா சிகிச்சை பெற்ற பிறகு 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்ற பிறகு ஓராண்டு வரை ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். பால்வினை, எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. பல்வேறு நோய் தடுப்பூசிகள், மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது ரத்ததானம் செய்யக்கூடாது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் நாம் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் ஒருவரின் வாழ்வினை காக்கும் என்பதால் தகுதிவாய்ந்த நபர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து, ரத்ததானத்தின் அவசியத்தை வலியுறுத்திடும் விதமாக ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவர் ரவிக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், துணை இயக்குனர் (காசநோய்) சுதாகரன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) லதா, நிலைய மருத்துவ அலுவலர் சூரியலட்சுமி, மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story