செங்குன்றம் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


செங்குன்றம் அருகே மின் தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர், பி.டி.மூர்த்தி நகர், பாடி காலனி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் முதல் நள்ளிரவு வரை மின்சாரம் தடைபட்டது. நள்ளிரவு ஆகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுபற்றி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நள்ளிரவு 12 மணி அளவில் செங்குன்றம்-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாடியநல்லூர் சிக்னல் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்வாரிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story