தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். விவசாய தொழிலாளி. இவரது மனைவி பாரதி (வயது 28). இவர்களுக்கு சஞ்சய்(10) என்ற மகனும், மதியழகி(8) என்ற மகளும் இருந்தனர். பிறந்து 6 மாதமே ஆன முனீஸ்வரன் என்ற கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தாமோதரன், தியாகதுருகத்தை சேர்ந்த அஞ்சலை(26) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் தாமோதரனுக்கும், பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாரதி குளிர்பானத்தில் விஷத்தை கலந்து சஞ்சய், மதியழகி ஆகிய 2 பேருக்கும் கொடுத்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாத 2 பேரும் தாய் கொடுத்ததும் மறுநொடியே அதை ஆசையோடு வாங்கி குடித்தனர்.

அதேசமயம் அந்த குளிர்பானத்தை கைக்குழந்தை முனீஸ்வரனுக்கு கொடுக்கவில்லை. பின்னர் அதே குளிர்பானத்தை பாரதியும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சஞ்சய், மதியழகி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாரதி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் பாரதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மல்லாபுரம் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் பாரதியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், குழந்தை முனீஸ்வரன் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவனுக்கு தாமோதரன் சொத்துகள் எழுதி வைக்க வேண்டும் என கூறி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பாரதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story