பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

2 ஆண்டுகளாக தீர்வு கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ் வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

அடுக்குமாடி குடியிருப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் ஏழை மக்களுக்கு என அரசு சார்பில் திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வீடற்ற சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும், வெளியூரில் இருந்து வரும் மக்கள் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்றாலும் திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செட்டிநாடு சிமெண்டு ஆலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முதியவர்கள் இந்த 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருவதுடன், இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் தனியாக செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் நேற்று பஸ் வசதி கேட்டு திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story