குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோவை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூலூர்
கோவை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
சூலூர் அருகே பாப்பம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில், அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாகவும், ஆகுவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கோவை அருகே பாப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், குடி தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 40 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதனால் தண்ணீருக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது.
ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக காத்துக்கிடந்தன.