சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருவண்ணாமலை அருகே சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து மங்கலம் வழியாக அவலூர்பேட்டை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது நீர்வரத்து பகுதிகளில் புதிதாக சிறுபாலங்கள் அமைக்கப்பட்டன. மங்கலம் காலனி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் நீர்வரத்து சிறுபாலம் பக்கவாட்டு பகுதிகளில் போதிய அளவு மண் கொட்டி சமன் செய்யாததால் அந்த பகுதி மேடும், பள்ளமாக காணப்பட்டது.
அவ்வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் இதனால் கீழே விழுபவர்களுக்கு காயங்களும், வாகன சேதமும் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுபாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் போலீசார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் பள்ளத்தை சரி செய்யக் கோரி பேசினர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் பள்ளமான பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் உடனடியாக மண் கொட்டி சமன் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.=======