சாலை பணியை விரைவுபடுத்தக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்-வாழப்பாடி அருகே பரபரப்பு
வாழப்பாடி அருகே சாலை பணியை விரைவுபடுத்தக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி:
சாலைமறியல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி- அணைமேடு சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டித்து புழுதிக்குட்டை- பேளூர் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தார்ச்சாலை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடிக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.