குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இது குறித்து புகார் அளித்தும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆ்த்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் அங்குள்ள திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தெரிவி்த்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.