குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

மனு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழமைக்கேல்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த ஆழ்துளைக்கிணறு பழுதடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து திரிந்து குடிநீர் சேகரித்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கை மனுக்கள் அளித்துவிட்டு, குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சாலை மறியல்

இப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்தது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்காமல் அந்த வாகனம் நேற்று முன்தினம் திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. கடுமையான போராட்டத்திற்கு இடையில் குடிநீர் சேகரித்து பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது ஆழ்துளை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் மேலும் பல நாட்கள் குடிநீருக்காக சிரமப்பட வேண்டுமோ? என்ற அச்சத்தில் குடிநீர் கேட்டு திடீரென தா.பழூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார் மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தா.பழூர் -அரியலூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story