கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தவர்களால் பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் (வயது 85). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது உறவினர்கள் சிலருடன் நேற்று வந்தார். அவர்கள் ஒரு கேனில் மண்எண்ணெய் கொண்டு வந்தனர். அப்போது ஒச்சாத்தேவருடன் வந்த பெண் ஒருவர் மண்எண்ணெய் கேன் மூடியை திறந்து அவரிடம் கொடுக்க முயன்றார். அதைப் பார்த்த போலீசார் அங்கு ஓடி வந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர்.
பின்னர் இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, ஒச்சாத்தேவருக்கு சொந்தமான சொத்துகளை, அவருடைய 2-வது மனைவி மற்றும் சிலர் அபகரித்துக் கொண்டு அவரை பராமரிக்காமல் விட்டதாகவும், அந்த சொத்துகளை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபடும் வகையில் மண்எண்ணெய் கேனுடன் வந்ததாகவும் தெரியவந்தது. பின்னர் அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். அதைத் தொடர்ந்து ஒச்சாத்தேவர் தனது கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் கொடுத்து விட்டு உறவினர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.