கொரட்டூரில் 2-வது வாரமாக வீதி திருவிழாவில் பொதுமக்கள் உற்சாகம்


கொரட்டூரில் 2-வது வாரமாக வீதி திருவிழாவில் பொதுமக்கள் உற்சாகம்
x

போதை இல்லா தமிழகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை கொரட்டூரில் வீதி திருவிழா நடந்தது.

சென்னை

போதை இல்லா தமிழகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சியும், ஆவடி மாநகர போலீசாரும் இணைந்து கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை கொரட்டூர் கிழக்கு நிழற் சாலையில் வீதி திருவிழா நடத்தப்பட்டது. 5 வாரங்கள் இதுபோல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2-வது வாரமாக நேற்று கொரட்டூரில் வீதி திருவிழா நடந்தது. இதற்காக அந்த சாலையில் காலை 6 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வீதி திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கலந்து கொண்டு சாலையின் நடுவில் கைப்பந்து, கால்பந்து, பல்லாக்குழி, கிரிக்கெட் செஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் பாட்டு பாடி, உற்சாக நடனம் ஆடினர். சிலம்பம், யோகாசனம் உள்ளிட்டவையும் நடந்தது. வாயில் நெருப்பை வைத்து வாலிபர் சாகசம் செய்து அனைவரையும் அசத்தினார். சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த இந்த வீதி விழாவில் ஆவடி கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி கலந்துகொண்டு சிறுவர்களுடன் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் விளையாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


Next Story