கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை


கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
x

கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சீபும், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கிறது. இந்த நிலையில் இந்த 6 வழிச்சாலை கரசங்கால் அருகே சாலையின் கீழே செல்லும் பாலாற்று குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அதில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வெளியேறி சாலையில் வீணாக ஒடுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில் இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்ந 2019-ம் ஆண்டு முதல் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் அப்பாவி மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதும் சரி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம்? இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story