குற்ற வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை -ஐகோர்ட்டு வேதனை


குற்ற வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை -ஐகோர்ட்டு வேதனை
x

குற்ற வழக்குகளில் போலீசார் தரப்புக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவிலும், டி.வி. தொடர்களிலும் துணை நடிகையாக நடித்தவர் 16 வயது மைனர் பெண். இவருக்கு சரவணன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இந்த அறிமுகம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து குளத்தூரில் உள்ள மோகன் கார்டன் என்ற இடத்துக்கு இந்த பெண்ணை அழைத்து சென்ற சரவணன், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பழனி, ஜெயக்குமார் ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை படம் பிடித்து மிரட்டி, அந்த பெண்ணை மணிபாரதி என்ற டெய்லர்

கடை உரிமையாளருடன் அனுப்பி வைத்துள்ளார். அவரும், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். இதேபோல, கோபிநாத், ராமு ஆகியோரும் அந்த மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளனர். இதற்காக இவர்களிடம் இருந்து சரவணன் பணமும் பெற்றுள்ளார்.

10 ஆண்டு சிறை

பின்னர், அந்த பெண்ணின் கம்மலையும் ஏமாற்றி பறித்து சென்றுள்ளான். இது அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தெரிய வர, போலீசில் கடந்த 2006-ம் ஆண்டு புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விபசார தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சரவணன் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ளவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் கோர்ட்டு, பழனி, ஜெயக்குமார், மணிபாரதி, கோபிநாத் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் வழங்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

போலீசுக்கு ஆதரவு

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் போலீஸ் சாட்சியாக உள்ள ஜெபராஜ் என்பவர், போலீசாரின் இருப்பு சாட்சியாகும். தன்னார்வலர் என்று கூறிக்கொள்ளும் இவர், வேறு பல விபசார வழக்குகளிலும் சாட்சியாக உள்ளார். இவர் எப்போதுமே போலீசாருக்கு ஆதரவாக சாட்சி சொல்பவர். எனவே, இவரது சாட்சியத்தை நிராகரிக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டார். இவரது வாதத்தை ஏற்க முடியாது.

சாட்சிகள் இல்லை

குற்ற வழக்குகளில் போலீசார் தரப்புக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன் வருவது இல்லை. பொதுநலன் மீது விருப்பம் உள்ள, சமுதாய பாதுகாப்பு மீது அக்கறை உள்ள ஒரு சிலரே போலீசாருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க முன் வருகின்றனர்.

குறிப்பாக குழந்தை கடத்தல் வழக்கில், போலீசாருக்கு அரிதிலும், அரிதாகத்தான் சாட்சிகளே கிடைக்கிறது. வேறு வழக்குகளில் போலீசுக்கு ஆதரவாக ஜெபராஜ் சாட்சியம் அளித்துள்ளார் என்பதற்காக இந்த வழக்கில் அவர் அளித்துள்ள சாட்சியத்தை நிராகரிக்க முடியாது.

தண்டனை குறைப்பு

இந்த வழக்கில் விபசார புரோக்கராக செயல்பட்ட சரவணன், இந்த பெண்ணை வைத்து சம்பாதித்துள்ளார். அதற்கு மனுதாரர்கள் இறையாகி உள்ளனர். மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய அபராதத்தை உறுதி செய்கிறேன். ஆனால், 10 ஆண்டு சிறை தண்டனையை, 3 ஆண்டுகளாக குறைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story