சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுமா?


சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுமா?
x

உடுமலை மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை திடீரென்று திருப்புவதால் ஏற்படும்விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

தளி,

உடுமலை மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை திடீரென்று திருப்புவதால் ஏற்படும்விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலம்

உடுமலை மத்திய பஸ் நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து அமராவதி, மூணார், திருமூர்த்தி மலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் குறுக்காக செல்கின்ற ரெயில் பாதையில் ரெயில் வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காந்திசவுக் பகுதியில் ரெயில் பாதையை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது.

ஆனால் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏதுவாக மேம்பாலத்தின் இரு புறங்களிலும் சாலையின் மத்தியில் டிவைடர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்களை திடீரென்று திருப்புவதால் விபத்துகளை ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சாலை தடுப்புகள்

நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆரம்பித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் முடியும் இந்த மேம்பாலத்தின் இரண்டு புறங்களிலும் சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால் காந்திசவுக் பகுதியில் வசித்து வருகின்ற பொதுமக்கள் ஆபத்தான முறையில் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு சாலையை கடந்து வருகின்றனர். அப்போது இறக்கத்தில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மீது மோதி வருகிறது. அதைத் தொடர்ந்து டிவைடர்கள் அமைக்க கோரி கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள அமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story