கடலூர் சில்வா் பீச்சில் குவிந்த பொதுமக்கள்


கடலூர் சில்வா் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:47 PM GMT)

மகாளய அமாவாசையையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள் மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

கடலூர்

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மேலும் புண்ணிய தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கோவில்களின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இதில் பெரும்பாலும் கடற்கரை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் தான் தர்ப்பணம் கொடுப்பது அதிகம் நடக்கிறது. வழக்கமாக வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாத பொதுமக்கள், இந்த மகாளய அமாவாசை அன்று தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

அதன்படி இந்த ஆண்டு மகாளய அமாவாசையான நேற்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் சில்வர் பீச்சில் காலை 7 மணி முதலே குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னர் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, எள், பழம், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அங்கு முன்கூட்டியே வந்து ஏராளமான புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை கொடுத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்பெண்ணையாறு

இதற்காக கடற்கரையிலும் காய்கறிகள், பழங்கள், வாழை இலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் கடலூர் தென்பெண்ணையாற்றின் கரையிலும் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் கெடிலம் ஆற்றங்கரையிலும், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதை பார்க்க முடிந்தது.


Next Story