ஈரோட்டில் தீபாவளிக்கு ஜவுளி வாங்க திரண்ட மக்கள்
ஈரோட்டில் தீபாவளிக்கு ஜவுளி வாங்க திரண்ட மக்கள்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகளை தற்போது இருந்தே வாங்கி வருகின்றனர். மேலும், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் ஜவுளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். மேலும் ஈரோட்டில் நேற்று ஜவுளிச்சந்தை கூடியது. அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கடைகள் அமைத்து இருந்தனர். ஜவுளிகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் மொத்தமாக ஜவுளியை வாங்கி சென்றனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, சென்டிரல் தியேட்டர் வளாகம், கனிமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் ஜவுளி விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதாக பொதுமக்களும் திரண்டனர். இதனால் மார்க்கெட் மட்டுமின்றி கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
குறிப்பாக ஈரோடு நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பகலில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலையில் மக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் ஈரோடு டவுன் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.