ஜமாபந்தியில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் மனு கொடுக்க ெபாதுமக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்த ஜமாபந்தியில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். அதன்படி, அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட வேடப்பட்டி மாதா கோவிலை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கினர். அதேபோல் அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, சிறுமலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். அப்போது பட்டா மாறுதல் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு தாசில்தார் தமிழ்செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுதா லீலாவதி, மண்டல துணை தாசில்தார் தங்கமணி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சுகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.