முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்
x

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

கரூர்

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி கரூர் மாவட்டத்தில் பக்தர்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீர் நிலைகளில் புனித நீராடினர்.

கடம்பந்துறை காவிரி நதிக்கரை

குளித்தலை கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புரோகிதர்கள் ஒரே நேரத்தில் பலரையும் வரிசையாக அமர வைத்து வேத மந்திரங்களை ஓதி, மறைந்த முன்னோர்களின் பெயர், நட்சத்திரங்களை கூறி தர்ப்பணத்திற்கான நடைமுறைகளை செய்தனர். பின்னர் அதை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை வழங்கினார்கள். இதையடுத்து கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு எதிரே உள்ள பிரசித்திபெற்ற கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு சென்றனர்.

கிருஷ்ணராயபுரம்-தோகைமலை

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு கிருஷ்ணராயபுரம், மாயனூர், மகாதானபுரம் சித்திலவாய், லாலாபேட்டை பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் கரைகளில் அமர்ந்து மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.தோகைமலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு ெபாதுமக்கள் வந்து புனிதநீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து சிவச்சாரியார்கள் முன்னிலையில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவிரி ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டு வீட்டிற்கு சென்றனர்.


Next Story