அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
இளையான்குடி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் உண்ணாவிரதம்
இளையான்குடி அருகே உள்ள சூராணம் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்திடம் முறையிட்ட பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு கனகராஜ் என்பவர் தலைமையில் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அறிந்த இளையான்குடி தாசில்தார் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மற்றும் சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் உறுதி
அப்போது தெரு விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 10 நாட்களுக்குள் சரி செய்யப்படும் எனவும், ஏ.டி. காலனி, கீழ சூராணம் ஆகிய பகுதிகளில் சாலை வசதிகள் 3 மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் பேரில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.