கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதோடு, உப்புநீரை குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதோடு, உப்புநீரை குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
குடிநீர் தொட்டிகள்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ளது சொலவம் பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சொலவம்பாளையம், குமாரபாளையம், இம்மிடிபாளையம், சிக்கலாம்பாளையம், கருப்பம்பாளையம், காமராஜர் நகர், உதயம் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் ஆழியாறு ஆற்றில் இருந்து குழாய் மூலம் சிங்கையன் புதூர் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தி்லிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊராட்சி பகுதியில் குமாரபாளையம் கடைசி பகுதி என்பதால் இந்த பகுதிக்கு ஆழியாறு குடிநீர் கிடைப்பதில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் சிக்கல் நிலை வருகிறது. குமாரபாளையம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட தொட்டியும், ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டியும் உள்ளது. இதில் தரைமட்ட தொட்டியில் நல்ல தண்ணீரும், மேல்நிலை தொட்டியில் உப்பு தண்ணீரும் ஏற்றப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
5 ஆழ்துளை கிணறு
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் குழாய்களும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்பட்டது. குமாரபாளையத்தை பொறுத்தவரையில் 5 ஆழ்துளை கிணறு மூலம் உப்புத்தண்ணீர் எடுக்கப்பட்டு வீதிகளுக்கும் வீடுகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. 3 ஆண்டுகளாக ஆழியார் குடிநீர் கிடைக்காமல் உப்பு தண்ணீரை பயன்படுத்தும் அவலம் உள்ளது. அதனால் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கவலையுடன் கூறிய கருத்துகளை காண்போம்.
உடல் உபாதைகள் ஏற்படுகிறது
குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலகணபதி:-
குமாரபாளையம் பகுதியில் ஏராளமான கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு பலமுறை ஆழியார் குடிநீர் கேட்டும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விநியோகம் செய்யாமல் இருப்பதால் எங்களுக்கு குடிப்பதற்கு ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் உப்பு தண்ணீரை குடிநீராக குடித்து வருகிறோம். உப்பு தண்ணீரை குடிப்பதால் அடிக்கடி எங்களது கிராமத்தினர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருகிறது. குடிப்பதற்க்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றார்.
குமாரபாளையம் எஸ்.சசிகுமார்:-
எங்கள் ஊரில் ஆழியாறு குடிநீருக்காக தரைமட்ட தொட்டி கட்டப்பட்டது. அப்போது தொடக்கத்தில் ஓரளவு குடிநீர் கிடைத்தது. ஆனால் தற்போது 3 ஆண்டுகளாக தரைமட்ட தொட்டிற்கு ஆழியார் குடிநீர் வராததால் தற்போது அந்த தொட்டியில் ஊராட்சி நிர்வாகம் உப்பு தண்ணீரை நிரப்பி குமாரபாளையம் பகுதி முழுவதும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு, அத்தியாவசிய தண்ணீர் தேவைகளை ஊராட்சி நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது. ஆனால் குடிப்பதற்கு சுவையான ஆழியாறு தண்ணீர் கிடைக்காததால் ஆழியார் குடிநீர் எங்கு கிடைக்கும் என எதிர்பார்த்து தேடிப்பிடித்து அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு சென்ற குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.
ஆய்வு செய்ய வேண்டும்
குமாரபாளையம் கீதா கூறியதாவது:- கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கு ஆழியார் ஆற்றில் இருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. ஆனால் எங்கள் கிராமத்திற்கு ஆழியார் ஆற்று குடிநீர் வராததற்கு காரணம் குறித்து குடிநீர் வடிகால் வாரிய துறையினரிடம் கேட்டால் குழாய் அடிக்கடி உடைகிறது. கடைசி பகுதி என்பதால் தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது எனக் கூறுகின்றனர். கிராம மக்கள் தேவைக்கு அவசியம் குடிநீர். குடிநீர் கிடைப்பதற்கு அரசு அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் குழாய் பதித்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து எங்கள் பகுதிக்கு குடிப்பதற்கு குடிநீரை உடனடியாக வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட நாள் கனவு
குமாரபாளையம் லட்சுமி:-
ஒருவேளை சாப்பாடு இல்லை என்றால் கூட இருந்து விடலாம் ஆனால் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை என்றால் உயிர் வாழ்வதற்கு சிரமம். எங்கள் ஊரில் குடிப்பதற்கு குடிநீர் கிடைப்பதில்லை என பல அதிகாரிகளுக்கு பல மனுக்களை கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. இதனால் நாங்கள் எங்களது தாகத்தை தீர்க்க அருகில் உள்ள மயிலேறி பாளையம் ஊராட்சிக்குச் சென்று அங்கு உள்ள நல்ல தண்ணீரை குடம் மற்றும் கேன்களில் பிடித்து பாதுகாப்பாக வைத்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது கடுமையான கோடை காலம் நெருங்குவதால் எங்களது ஊராட்சி பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு உப்பு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. ஆனால் நல்ல தண்ணீர் கிடைக்காமல் நீண்ட நாள் கனவாகவே இருப்பது எங்களுக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குமாரபாளையத்திற்கு ஆழியார் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டணம் மட்டும் வசூல்
சொலாம்பாளையம் ஊராட்சி பொருத்தவரையில் ஊராட்சி சார்பில் குமாரபாளையத்திற்கு ஆழியார் குடிநீர் தர வேண்டும் என பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாலும், குமாரபாளையம் கடைசி கிராமம் என்பதால் குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
சொலவம்பாளையம் ஊராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் பாக்கி இன்றி செலுத்தி வருவதாகவும், ஆனால் குமாரபாளையத்திற்கு குடிநீர் வழங்காமல் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குமாரபாளையத்திற்கும் தண்ணீர் வழங்கி வருவதாகவும் கூறி அதற்கான கட்டணத்தை குடிநீர் வாரிய அதிகாரிகள் வசூல் செய்து வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் கூறினார்.






