'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் - ஓபிஎஸ் அறிக்கை


திராவிட மாடல் ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் - ஓபிஎஸ் அறிக்கை
x

'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "திராவிட மாடல்" என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் கேட்டால் 'கடன்', 'நிதிப் பற்றாக்குறை' எனச் சொல்லும் தி.மு.க. அரசு, கடலில் பேனா திட்டத்தை அமல்படுத்த துடிப்பது சுயநலத்தின் உச்சகட்டம். பொது நலத் திட்டத்தை நிறைவேற்ற பணமில்லாத நிலையில் தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு செல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. பத்திரிகையைப் படித்தாலே பாலியல் பலாத்காரங்கள்தான் அதிகம் இருக்கின்றன. தி.மு.க.வினரும், தி.மு.க. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்களை மிரட்டியது, ராணுவ வீரரை தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்தது, நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும், அங்குள்ள வாகனங்களையும் அமைச்சரின் ஆதரவாளர்களே தாக்கியது, அமைச்சர்கள் பொதுமக்களை அடிப்பது, கிண்டல் செய்வது என பல கேலிக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன.

வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்கேற்ப சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மணல் கடத்தலும், ரேஷன் பொருட்கள் கடத்தலும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வன்முறைக் களமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்று சொல்லிவிட்டு, பார்கள் மூலமும், தானியங்கி இயந்திரங்கள் மூலமும் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு "வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது?" என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை தி.மு.க. அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story