சேலத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடிய கேரள மக்கள்


சேலத்தில் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

சேலம்

ஓணம் பண்டிகை

திருவோண நாளில் கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன் மக்களை சந்திக்க வருவதாக ஐதீகம். அதன்படி, நேற்று மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் கேரள மாநிலத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலத்திலும் கேரள மாநில மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். ஓணம் பண்டிகையையொட்டி அவர்கள் நேற்று தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

சங்கர் நகரில் உள்ள கேரள சமாஜத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் பூக்களை சுற்றி நடனமாடி வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரெயில்வே கோட்ட அலுவலகம்

இதேபோல் சேலம் சூரமங்கலத்தில் உள்ள ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி துறைவாரியாக ஒவ்வொரு அலுவலகத்திலும் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பின்னர் திருவோண விருந்து பரிமாறப்பட்டது.

மேலும் அழகாபுரம், சுவர்ணபுரி, 5 ரோடு, மெய்யனூர், பழைய பஸ் நிலையம் என மாநகரில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் கேரள மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குச்சாவடி சாஸ்தா நகர் அய்யப்பன் கோவில், டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்று கொண்டாடினர்.


Next Story