அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வேப்பந்தட்டை தாலுகா மக்கள்


அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வேப்பந்தட்டை தாலுகா மக்கள்
x

தலைமையிடமாக அறிவிக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி வேப்பந்தட்டை தாலுகா பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தலைமையிடமாக அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தலைமையிடமாக அறிவிக்கப்பட்டு 28 ஆண்டுகள் முடிந்துள்ளது. தாலுகாவாக அறிவிப்பதற்கு முன்பு இருந்த ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி இது தவிர கடந்த 28 ஆண்டுகளில் அரசு கலைக்கல்லூரி, நீதிமன்றம், கருவூலம் ஆகியன மட்டுமே தொடங்கி செயல்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ந்த தாலுகாகளில் இருக்கக்கூடிய அடிப்படை தேவைகளான அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிய முக்கியமான அலுவலகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கக்கூடிய விஷயமாகவே உள்ளது.

அதேபோன்று விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வேளாண்மை கல்லூரியை தொடங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

கோரிக்கை

இந்த இடத்தில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் போதுமான அளவு இடம் உள்ளது. ஆனால் இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புற காவல் நிலையம் கொட்டாய் அமைத்து தற்காலிகமாக தொடங்கப்பட்டது. அந்த புறக்காவல் நிலையம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. புறக்காவல் நிலையம் இருந்த கொட்டாய் தற்போது சுவரொட்டி ஒட்டும் சுவராக பாழடைந்து கிடக்கிறது. இந்த புறக்காவல் நிலைய கொட்டாய் இருப்பதனால் அதன் பின்புறம் உள்ள கழிவறை பொதுமக்களுக்கு தெரியாமலேயே உள்ளது. மேலும் புறகாவல் நிலைய பாழடைந்த கொட்டாயை சுற்றி பலர் தற்காலிக கடைகளை அமைத்தும், வாகனங்களை நிறுத்தியும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிழற்குடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குறிப்பாக புறக்காவல் நிலையம் செயல்பட்ட கொட்டாயை அகற்றி பயணிகள் அச்சமின்றி நிழற்குடையில் நின்று பஸ் ஏறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story