வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்


வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். மழலை பள்ளிகளை கோடைகாலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது.

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசின் 100 நாட்கள் பணியின் போது போதிய குடிதண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

கால்நடைகளுக்கான வழிமுறைகள்

கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டவும், கால்நடைகளுக்கு போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் கொடுக்க வேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.

செல்லப்பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம். மேலும் பருவ நிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி 'சார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

டியூப்லைட்

மேலும் மாடிவீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழேவிழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை இயன்ற வரை அதிக அளவில் சேகரித்து வைத்துகொள்ளலாம்.

விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கியாஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்எண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story