மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்லடம்
பல்லடம் செட்டிபாளையம் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தற்காலிகமாக மூடி மீண்டும் திறக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மதுக்கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும், ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்னல்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த மதுக்கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மது வாங்கி குடித்துவிட்டு போதை தலைக்கேறி அருகில் உள்ள கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் படுத்து விடுகின்றனர். மேலும் பலர் பெண்கள் வருவது கூட தெரியாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மதுப்பிரியர்கள் எந்தநேரமும் போதையில் நிற்பதால் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
மேலும் பல்லடம்- செட்டிபாளையம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மதுவாங்க வரும் மதுப்பிரியர்கள் கடை முன்பு நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த மதுக்கடையை அகற்றகோரி 15 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மதுக்கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மதுக்கடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்காலிகமாக மூடப்பட்டது
மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த மதுக்கடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தார்.
தாசில்தாரின் இந்த அறிவிப்பை உற்சாகமாக கைதட்டி வரவேற்ற பொதுமக்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இந்த நிலையில் தாசில்தாரின் உத்தரவை மீறி மதியம் சுமார் 3 மணி அளவில் மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.