நாய், குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி


நாய், குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் பகுதியில் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பகுதியில் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

தெருநாய்கள்

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்கு மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெறி நாய், சொறி நாய்களின் நடமாட்டமும் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. சில நேரங்களில் அவை பாதசாரிகள், இருசக்கரவாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

குரங்குகள் தொல்லை

அதேபோல் குரங்குகளின் அட்டகாசம் காணப்படுகிறது. வீட்டின் மாடி வழியாக உள்ளே புகுந்து சமையல் அறையில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு வீசி எறிவதோடு. வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடி வருகின்றன. துரத்த முயன்றால் சீறியபடி கடிக்க வருகின்றன. இதனால் வீட்டில் உள்ள பெண்கள் கதவு, ஜன்னல்களை மூடி வைத்துக்கொண்டு அச்சத்துடன் மிகவும் பயந்த நிலையில் காணப்படுகின்றனர்.

மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளையும் கடிப்பதற்கு சீறுவதால் அச்சப்படுகின்றனர். திருக்கோவிலூர் பகுதியில் குரங்குகள் மற்றும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுற்றித்திரியும் மாடுகள்

இது தவிர திருக்கோவிலூர் நகரில் சுமார் 100-க்கும் அதிகமான மாடுகள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றன. சில நேரங்களில் மாடுகள் பாதசாரிகளை முட்ட வருகின்றன. இதைப்பார்த்து அவர்கள் அஞ்சி ஓட்டம்பிடிக்கும் சம்பவமும் நிகழ்ந்து வருகின்றன.

எனவே வளர்ப்போர் மாடுகளை கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும், மாறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதுடன், அதன் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story