அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி


அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Sep 2023 11:30 PM GMT (Updated: 22 Sep 2023 11:30 PM GMT)

நத்தம், செந்துறை பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல்

நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் சிறுகுடி, ஊராளிபட்டி, நத்தம், கோவில்பட்டி, செந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதிகளில் காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குறைந்த மற்றும் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு வீடு, கடைகளில் உள்ள மிக்சி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகின்றன. மேலும் மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் வணிக நிறுவனத்தினர், பின்னலாடை தொழில் செய்பவர்கள், மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்கள் மின்தடையால் பணிகள் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் கொசு தொல்லை, புழுக்கத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story