கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி


கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இயல்பு நிலையை விட கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு இயல்பு நிலையைவிட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை பார்த்து தினசரி வெப்பத்தின் அளவு மற்றும் வெப்பஅலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். தாகம் இல்லாதபோதும், வெப்பநிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் காலங்களில் லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கிப்பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் துணி ஆடைகளை அணிதல் வேண்டும். குடை, தொப்பி மற்றும் காலணிகளை அணிந்து செல்லவேண்டும்.

அறிவுரை

மேலும் இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீடுகளில் தயாரிக்கப்படும் பானங்களான லெஸி, எலுமிச்சை சாறு, மோர், அரிசி வடிநீர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், பழச்சாறு போன்றவற்றை பருக வேண்டும். வெயிலினால் மயக்கமோ, உடல்பாதிப்போ ஏற்படுமாயின் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். கால்நடைகளை நிழற்பகுதியில் கட்டி வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு அவ்வப்போது பருக போதுமான அளவு தண்ணீர் வைக்க வேண்டும். மின்விசிறி மற்றும் ஈர துணியை பயன்படுத்தி வெப்ப பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்தை ஆவியாக்கும் மது, தேனீர், காபி மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story