ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வால் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறிய மக்கள்...!
ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வால் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மக்கள் மாறியுள்ளனர்.
சென்னை,
ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது.
அதிக கொழுப்பு சத்துள்ள ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. ஆவின் பால் வினியோகஸ்தர்கள் மற்றும் பார்லர்களில் ஆரஞ்சு அரைலிட்டர் பால் தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது. மளிகை, மற்றும் பெட்டிக்கடைகளில் அவற்றின் விலை ரூ.31, ரூ.32 என விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஆவின் பச்சை நிற பால் அரைலிட்டர் ரூ.22க்கு கிடைக்கிறது. ஆவின் வினியோகஸ்தர்கள் தவிர பிற இடங்களில் ரூ.23, ரூ.24-க்கு விற்கப்படுகிறது. ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 ஆவின் உயர்த்திய நிலையில் கடைகளில் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்கப்படுகிறது. இதனால் இதுவரையில் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கியவர்கள் ஆவின் பச்சை நிறத்திற்கு மாறியுள்ளனர்.
அரை லிட்டருக்கு 8 ரூபாய் வித்தியாசம் இருப்ப தால் சாமான்ய மக்கள் பச்சை நிற பால் பாக்கெட்டை தற்போது அதிகளவில் வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் கடைகளில் பச்சை நிற பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட பால் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் ஆவின் பச்சை நிற பால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.