ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்


ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆயுதபூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் விற்பனை களைகட்டியது.

கோயம்புத்தூர்


கோவையில் ஆயுதபூஜையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் விற்பனை களைகட்டியது.

ஆயுத பூஜை

தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் ஆயுத பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, பஸ் கம்பெனி, கல்வி நிறுவனங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதேபோல வீடுகளிலும் பூஜை செய்வார்கள்.

ஆயுதபூஜை இன்றும் (செவ்வாய்க்கிழமை), விஜயதசமி நாளையும் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பூஜை பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க கோவை பூமார்க்கெட், ஒப்பணக்காவீதி டி.கே.மார்க்கெட் உள்ளிட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். கடைகளில் பொரி, கடலை, அவல் விற்பனை மும்முரமாக நடந்தது. பொரி ஒரு பக்கா ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வு

கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. ஆனாலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து பூக்களை வாங்கிச்சென்றனர். அதன்படி கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களும் விலை உயர்ந்தன.

அதன் விவரம் கிலோவில் வருமாறு:-

முல்லை மற்றும் ஜாதிப்பூ ரூ.800-க்கும், ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செவ்வந்தி ரூ.400-க்கும் விற்பனையானது. அரளி ரூ.400, சம்பங்கி ரூ.500, கோழிக்கொண்டை ரூ.150, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.50, ஒரு தாமரைப்பூ ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனையானது. இதேபோல் எலுமிச்சை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200, ஆப்பிள் ரூ.100, சாத்துக்குடி ரூ.60, மாதுளை ரூ.150, கொய்யா ரூ.80, திராட்சை ரூ.80, ஆரஞ்சு ரூ.80, ஒரு டஜன் பூவன் பழம் ரூ.40, கரும்பு ஒரு ஜோடி ரூ.120, தேங்காய் ஒன்று ரூ.20 முதல் ரூ.30, வாழைக்கன்று ஒன்று ரூ.10 என விற்பனையானது. இதுதவிர பூஜை பொருட்கள் விற்பனையும் அதிக அளவில் நடந்தது. கடை வீதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதால் கடைகளில் விற்பனை களை கட்டியது.


Next Story