கடைவீதிகளில் பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்


கடைவீதிகளில் பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
x

கடைவீதிகளில் பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்

மதுரை

மதுரை

இன்று ஆயுத பூஜையையொட்டி கடைவீதிகளில் பழங்கள்,பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை

இன்று(செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதைெயாட்டி மதுரையில் உள்ள கடைவீதிகள், மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதே போல மேலூர், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளிலும் ஆயுத பூஜையையொட்டி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கொரோனா காலத்தில் ஆயுத பூஜை நாட்களில் விற்பனை இந்த அளவுக்கு இல்லை. தற்போது மக்கள் ஆயுத பூஜை கொண்டாட கடைவீதிகளில் பழங்கள், பூக்கள், பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கினார்கள்.

வியாபாரம் நன்றாக இருக்கிறது

மதுரை கீழமாசி வீதியை சேர்ந்த வியாபாரி கண்ணன்:

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையும் தற்போது தான் வளர்ச்சி அடைகிறது. அதற்கு ஏற்றார்போல், வியாபாரிகளின் வாழ்க்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆயுதபூஜையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவரும் அதனை உற்சாகமாக வரவேற்கும் விதமாக இருக்கிறது. பொருட்களின் விலையை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், அதிக மக்கள் அதிக அளவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், அனைத்து தொழில் துறையினருக்கும் வருமானம் கிடைத்துள்ளது.

இல்லத்தரசி ராஜலட்சுமி மதிவாணன்:

ஆயுதபூஜைக்கான அனைத்து பொருட்களும் வாங்கி விட்டோம். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு அனைத்து பொருட்களின் விலையும் சீராக இருக்கிறது. மல்லிகைப்பூவை எடுத்துக்கொண்டால் ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனையாகிறது. இதுபோல், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் சீராக இருக்கிறது. கீழமாசி வீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நவராத்திரியை கொண்டாடுவதற்கு அனைத்து குடும்பத்தினரும் தயாராகி விட்டனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து திருமங்கலத்தை சேர்ந்த பூ வியாபாரி சங்க செயலாளர் சிவா கூறியதாவது:-

கடந்த ஆண்டு கொரோனா சமயங்களில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை மிகவும் குறைவாக இருந்தன. அப்போது கிலோ ரூ.50-க்கு தான் விற்பனையானது, தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தினால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து மல்லிகை பூ கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையானது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பூ வியாபாரம் நன்றாக உள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சோழவந்தானில் பொரிகடலை மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வரும் எஸ்.சரவணகுமார் கூறும் போது:-

3 ஆண்டுக்கு பிறகு அதிகமான பொது மக்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடுவதற்காக பொரி கடலை மற்றும் பூஜை பொருட்களை வாங்கி செல்கின்றனர். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

சோழவந்தானில் பூ வியாபாரி அழகர்:-

இந்த ஆண்டு பூ வியாபாரம் நன்றாக இருக்கிறது. கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு இன்றி மக்கள் அவதிப்பட்டார்கள். தற்போது மீண்டும் இயல்பு நிலைதிரும்பி உள்ளதால் வியாபாரம் நன்றாக இருக்கிறது.


Next Story