குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
சின்னதாராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியல் செய்ய முயற்சி
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிக்குறிச்சி ஊராட்சியில் கரைப்பசுபதிபாளையம், காச்சினாம்பட்டி பிரிவு ஆகிய ஊர்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த 6 மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆழ்குழாய் கிணற்றை சரி செய்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் கரூர்-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் மறியல் செய்வதற்காக வந்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்குள் சரி செய்து தருகிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீடுகளுக்கு சென்று தண்ணீர்
இதேபோல் கரைப்பசுபதிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடிதண்ணீர் வராததால் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அருகே உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் கேட்கும் நிலை உள்ளது. எனவே அதனையும் சரி செய்து தரும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் ஒரு வாரத்திற்குள் சரி செய்யாவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அந்தப்பகுதி பொதுமக்கள் கூறினர்.