எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர் - டி.டி.வி. தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டி.டி.வி. தினகரன் பேசியதாவது,
அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் சர்ச்சையாக பேசியிருந்தால் அன்றே பதவி பறிபோயிருக்கும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, அமைச்சர்களுக்குதான் தூக்கம் இல்லாமல் இருந்தது.
திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர் இருப்பதால் தான் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை திமுக கட்சியினர் யாரையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொது வெளியில் மு.க.ஸ்டாலின் புலம்புவதை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.
அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார். இவர் போகும் கார், வீடு எல்லாம் ஓசி. ஆனால் அகங்காரம், ஆணவத்தால் எஜமானர்களாகிய மக்களை ஓசி என கூறுகிறார். திமுகவினர், தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள். தற்போது புதிதாக மதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.