கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு


கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு
x

கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டை

திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்று வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் நின்று சென்று வந்தது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரெயில் இயக்கப்பட்ட அட்டவணையில் கீரனூரில் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். குறிப்பாக அறவழிக்குழுவினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். மேலும் மராட்டிய மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. கறம்பக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர் அவர்களும் டெல்லியில் ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து ரெயிலை கீரனூரில் நின்று செல்ல கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று முதல் கீரனூர் ரெயில்வே நிலையத்தில் ஒரு நிமிடம் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது. இதையடுத்து மகிழ்ச்சிடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து அந்த ரெயில் கீரனூர் நிலையம் வந்ததும் மலர் தூவி வரவேற்றனர். மேலும் என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பின்னர் புதுக்கோட்டை வரை டிக்கெட் எடுத்து அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

இதேபோல் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story