மாற்று இடம் வழங்கக்கோரி காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள்


மாற்று இடம் வழங்கக்கோரி காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள்
x

ஸ்ரீரங்கத்தில் குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கத்தில் குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

ஸ்ரீரங்கம் அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் காலிகுடங்கள் மற்றும் காலி பாத்திரங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கொடுத்த மனுவில், கடந்த 35 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. தற்போது குடும்பங்கள் அதிகரித்த காரணத்தால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் குடிசைபோட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியேறி வசித்து வருகிறோம்.

ஆனால் தற்சமயம் அறிவியல் பூங்கா வந்ததின்பேரில், எங்களை காலி செய்ய மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது. தினமும் அன்றாட கூலி வேலைகள் செய்து குடும்பம் நடத்தி வரும் எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களது பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

விளையாட்டு மைதானம்

துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு ஆசிரியர் இல்லாததால் எங்களால் உரிய பயிற்சி எடுக்க முடியவில்லை. உடனடியாக எங்கள் பள்ளிக்கு விளையாட்டு ஆசிரியரும், மைதானமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதேபோல் நிலம் ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 466 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story