மாந்தோப்பில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள்


மாந்தோப்பில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள்
x

பேரணாம்பட்டு அருகே பட்டா வழங்கிய இடத்தை அளந்து கொடுக்காததால் பொதுமக்கள் மாந்தோப்பில் குடிசை அமைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

72 பேருக்கு பட்டா

பேரணாம்பட்டு ஒன்றியம் செர்லப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கான இடத்தை அளவீடு செய்து தராததால் பயனாளிகள் வீடு கட்டாமல் இருந்து வந்துள்ளனர்.

இடத்தை அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தாசில்தார் நெடுமாறன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

குடிசை அமைத்தனர்

இந்தநிலையில் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருந்த மாந்தோப்பில் திடீரென புகுந்து குடிசைகள் அமைத்தனர். இதுகுறித்து மாந்தோப்பு உரிமையாளர் உமாதேவி, பாலாஜி ஆகியோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் மாந்தோப்பு நிலத்தை கடந்த 2020-ம் ஆண்டு விலைக்கு வாங்கியதாகவும், அது தங்களுக்கு சொந்தமானது என்றும், மாந்தோப்பில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் உனடியாக வீடுகள் கட்டவில்லை, மேலும் நில உரிமையாளர் பட்டா வழங்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மாந்தோப்பு உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆதிதிராவிடர் நல தாசில்தார் சந்தோஷ் நேரில் சென்று பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது குறித்து அரசு வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்துவதாகவும், மாற்று இடத்தை தேர்வு செய்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து ஆதி திராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தில் மனுக்கொடுக்கும்படியும் கூறிய அவர் குடிசைகளை அகற்றும்படி கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story