குடிநீர், சாலை வசதி கேட்டு படையெடுத்த மக்கள்


குடிநீர், சாலை வசதி கேட்டு படையெடுத்த மக்கள்
x

குடிநீர், சாலை வசதிகள் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் படையெடுத்து வந்து மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

அடிப்படை வசதிகள் கேட்டு...

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

அப்போது பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி விரிவாக்க பகுதியை சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கொட்டப்பட்டி விரிவாக்க பகுதியான மருதமாணிக்கம் நகர், எம்.எஸ்.எஸ்.நகர், சண்முகாநர், லெட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு தெருவிளக்கு, குடிநீர், சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடிநீர் வசதி

இதற்கிடையே அம்பாத்துறை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒருசிலரை மட்டும் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், திண்டுக்கல் அமைப்புசாரா, கட்டுமான நலவாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை. இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் கேட்டு தொழிலாளர்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகிறது. எனவே போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் திண்டுக்கல் மையத்தின் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு மனு கொடுத்தனர். அதில் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பள உயர்வை உடனே வழங்க வேண்டும். தொலைதூர கல்வி இயக்கத்தின் படிப்பு மைய பணியாளர்களை பணியிறக்கம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருவோரில் சிலர் பைகளில் மண்எண்ணெய், பெட்ரோல், பூச்சி மருந்து ஆகியவற்றை கொண்டு வந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இதை தடுக்க பைகளை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். அதையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மண்எண்ணெய் பாட்டிலை பையில் மறைத்து கூட்ட அரங்கில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மனு கொடுக்க வருவோரின் பைகளை பாதுகாப்பாக வைக்க வசதி செய்யும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பைகளை வைக்க தனி வசதி செய்யப்பட்டது. டோக்கன் முறையில் பைகள் பெறப்பட்டு, திரும்ப வழங்கப்படுகிறது.


Next Story