சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு


சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு
x

வந்தவாசியில் சீட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை இழந்தவர்கள் உடனடியாக பணத்தை மீட்டுத்தரக்கோரி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் சீட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை இழந்தவர்கள் உடனடியாக பணத்தை மீட்டுத்தரக்கோரி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீட்டு நிறுவனம்

வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் சம்சுமொய்தீன் என்பவர் வி.ஆர்.எஸ் எனும் தனியார் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ஆரணி, தெள்ளார், தேசூர், செய்யூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சீட்டு சேர்ந்தனர்.

தனது சீட்டு நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி பணம் வசூலித்தார். அதனை நம்பித்தான் இவர்கள் பணத்தை கட்டி வந்தனர்.

கோடிக்கணக்கில் மோசடி

இதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மூலம் பல நூறு கோடிக்கு மேல் பணம் வசூல் செய்த சம்சுமொய்தீன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானார்.

பணத்தை இழந்த பொதுமக்கள் மற்றும் ஏஜெண்டுகள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு சம்சு மொய்தினை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இதுவரை பணம் மீட்டுத்தரப்படவில்லை.

ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

இந்த நிலையில் சென்னை, செய்யூர், தேசூர், கொடுங்காலூர், தெள்ளார், காஞ்சீபுரம், வேலூர் போன்ற பல ஊர்களிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் வந்தவாசியில் ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று திடீரென குவிந்தனர். அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. மறியல் நடக்கலாம் என்பதால் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பணத்தை மீட்டுத் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

போலீசார் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story