பொங்கல் வைத்து போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்கள்
கிடப்பில் போடப்பட்ட பாலப்பணியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பொங்கல் வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலம் அமைக்க பள்ளம்
ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பாச்சிக்கோட்டையிலிருந்து மேலப்பட்டிக்கு செல்லும் மயான சாலையில் புதிதாக பாலம் அமைத்து, சாலை அமைக்க ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. இதனை எடுத்த ஒப்பந்ததாரர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பாலம் அமைக்க பள்ளம் தோண்டியுள்ளார்.
இந்நிலையில் பள்ளம் தோண்டி 6 மாத காலமாகியும், இதுவரை புதிய பாலமோ, சாலையோ அமைக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட முயற்சி
இதையடுத்து மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சொர்ணகுமார் மற்றும் பாச்சிக்கோட்டை பொதுமக்கள் ஒன்றிணைந்து உடனடியாக அப்பகுதியில் பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோண்டப்பட்ட பள்ளத்தில் அடுப்பு வைத்து, பொங்கலிட்டு, சாலையில் படையல் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, சப்-இன்ஸ்பெக்டர் நதியா, திருவரங்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னையா, பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பரபரப்பு
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மயானத்திற்கு செல்லும் சாலையில் புதிய பாலம் அமைத்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
மேலும் அரசு பதிவேட்டில் உள்ளபடி வரத்து வாய்க்கால்கள் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தோண்டப்பட்ட பள்ளத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.