கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்


கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
x

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூடுதல் உதவித்தொகைக்கான நேர்முகத்தேர்வுக்கு மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

நேர்முகத்தேர்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் பராமரிப்பாளருக்கான உதவித்தொகை ரூ.1,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த பராமரிப்பாளருக்கான உதவித்தொகை பெறுவதற்கான நேர்முகத் தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேர்முகத் தேர்வுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் குமரேசன், சிவாஜிராவ், ரம்யா குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.

ஏராளமானோர் குவிந்தனர்

இந்த முகாமுக்கு ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களின் பராமரிப்பாளருடன் குவிந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. .

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பராமரிப்பாளருக்கு கூடுதலாக ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 430 மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 60 சதவீதத்திற்கு மேல் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பாளருக்கு இந்த உதவித் தொகை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story