கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பேர்சில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அழகுலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவசகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களிடம் தாசில்தார் லெனின், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், 'நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். ஆனால், எங்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு எப்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்பதை தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்' என்று தெரிவித்தனர்.

அதற்கு அதிகாரிகள், 'மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் நீங்கள் சார்ந்துள்ள பகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகி மனு அளித்தால், அந்த மனுவை பரிசீலனை செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story