உயர்கல்வி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது மட்டுமே கவர்னரின் குறிக்கோள் மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றச்சாட்டு


உயர்கல்வி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது மட்டுமே கவர்னரின் குறிக்கோள் மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Sept 2023 2:00 AM IST (Updated: 9 Sept 2023 2:02 AM IST)
t-max-icont-min-icon

உயர்கல்வி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை மட்டுமே கவர்னர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மதுரை


உயர்கல்வி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை மட்டுமே கவர்னர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

துணைவேந்தர் தேடல் குழு

தமிழக மக்கள் கல்வி கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் முரளி, அரசு உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக ஆளுநர் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் போது இந்த விதிகளை குறிப்பிடவில்லை. ஏற்கனவே, கவர்னர் பிரதிநிதி ஒருவர் இந்த துணைவேந்தர் தேடல் குழுவில் உள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசு, பல்கலைக்கழகங்களின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாமல் போகும் நிலை உருவாகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வழக்கு ஒன்றில் தமிழக சட்டசபையில் வைத்து முடிவு எடுக்காதவரை பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் இந்த மாநிலத்திற்கு செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எதிராக

கடந்த 2022-ல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையிட முடியாது என்ற தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். தமிழக மக்களின் கல்வி உரிமையை தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்டசபைதான் தீர்மானிக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.57,500 மாதாந்திர சம்பளமாக வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய விதிகளில் உள்ளது.

அதாவது, தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை மட்டுமே ஆளுநர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என தெரிகிறது. மாநில அரசிடம் ஆலோசனை செய்யாமலும், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளை மதிக்காமலும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவது மக்கள் விரோதமாகும். தமிழகத்தின் உயர்கல்வி விவகாரத்தில் அரசியல் ரீதியாக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது மாநிலத்தின் கல்வி உரிமையை கடுமையாக பாதிக்கும். எனவே, துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் ஆளுநரின் தன்னிச்சையான முடிவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story