கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து நிலம் சம்பந்தமாக 95 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 52 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 59 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 91 மனுக்களும் என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கலெக்டர் நல திட்ட உதவிகளாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 11 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சம் வீதம் ரூ.11.55 லட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் 3 சக்கர நாற்காலிகளையும், மூளை முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் உடனடியாக பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகையும் இலவசமாக வழங்கினார்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தனித்துணை ஆட்சியர் மதுசுதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story