1½ மாதங்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:அரசு பள்ளியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்;மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு


1½ மாதங்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்:அரசு பள்ளியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்;மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு
x

1½ மாதங்களுக்கு பிறகு ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு

1½ மாதங்களுக்கு பிறகு ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆசிரியர் காலிப்பணியிடம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அன்று முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

எனவே ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கொடுத்த மனுவில், "அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 4 ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது.

அங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். அதேசமயம் 8 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேவையான ஆசிரியர் இல்லாமல் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.

கடன் தள்ளுபடி

பர்கூர் மலைப்பகுதி பெஜ்ஜில்பாளையத்தை சேர்ந்த சரோஜா என்பவர் தனது தம்பி மகன்களுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது தம்பி மாதேஸ் கூலி வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி சாந்தி அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றினார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மாதேசும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தியும் இறந்துவிட்டனர். இதனால் அவர்களது 2 மகன்களை நான்தான் வளர்த்து வருகிறேன்.

இந்தநிலையில் சாந்தி மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்றிருந்த ரூ.47 ஆயிரம் கடனுக்கு 3 தவணை தொகையை மட்டும் செலுத்தி இருந்தார்.

அவர் இறந்துவிட்டதால், அந்த கடன் தள்ளுபடி செய்துவிட்டதாக மகளிர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கடன் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் தம்பி மகன்களையும் பராமாித்து வருகிறேன். எனவே தம்பியின் மனைவி வாங்கி இருந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

ரூ.1 கோடி இழப்பீடு

ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் விதவையர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், "முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களுக்கு தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் சீருடை பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் படைவீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்", என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு இருந்தன.

புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களின் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "கே.வி.கே. அரசு ஆண்கள் பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் சக ஆசிரியர்கள், மாணவர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். அவர் முறையாக வகுப்புக்கு சென்று பாடம் கற்று கொடுப்பதில்லை. மாணவர்களை டீ வாங்கி வர சொல்லி இருக்கிறார். எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.

உடனடி நடவடிக்கை

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 245 மனுக்களை கொடுத்தனர். இதில் சத்தியமங்கலம் ராஜன்நகர் புதுவடவள்ளி அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் சந்துரு மாதேஸ்வரன் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவர 3 சக்கர சைக்கிள் வழங்கக்கோரி மனு கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர் சந்துரு மாதேஸ்வரனுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதை செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனா்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ள செல்ல அனுமதித்தனர்.


Related Tags :
Next Story